குடும்ப தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

குடும்ப தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
குடும்ப தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், இந்த ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இந்த தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய, அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன் முதலில் முன் வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம் என்றும்
குடும்ப தலைவிகள் பொருளாதாரத்திற்காக கணவனை சார்ந்திருக்கும் சூழ்நிலையே நிலவுகிறது. தங்களது தனிப்பட்ட ஆர்வம், கனவுகளுக்காக அவர்களால் செலவு செய்ய முடியாத நிலைமையில்தான் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.
வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குடும்பத்தலைவியின் உழைப்பின் மதிப்பு கணவனின் அலுவலக வேலை மதிப்பை விட குறைந்தல்ல என்று உச்ச நீதிமன்றமே ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக் கொண்டன. தமிழ்நாட்டில் தொடங்கி அசாம் சட்டமன்ற தேர்தல் வரை இது எதிரொலித்தது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை இருப்பினும், இந்த சிறிய தொகையாவது இல்லத்தரசிகளுக்கு கிடைக்கிறதே என்று தான் கருத வேண்டிய நிலையுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.இந்தத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com