
எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கனவு இல்லம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், கல்மரம் என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1409 சதுர அடி வீடு கடந்த 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து 2024 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திலகவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஏற்கனவே சொந்தமாக வீடு இருந்தாலும், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எழுத்தாளர்கள் வீடு ஒதுக்கீடு பெற தகுதி உண்டு என 2022 ஆம் ஆண்டு அரசாணையில் குறிப்பிட்டுள்ள நிலையில், அதனை மாற்றி வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என அரசாணையில் திருத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, திலகவதி உள்ளிட்டோருக்கு வீடு ஒதுக்கீடு செய்த உத்தரவை ரத்து செய்தது ஏன் என அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதியில்லை என்ற அரசாணை பின்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.