கண்ணகி கோயில் திருவிழா..! பக்தர்கள் வழிபாடு...!!

கண்ணகி கோயில் திருவிழா..! பக்தர்கள் வழிபாடு...!!
Published on
Updated on
2 min read

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு திருவிழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கல தேவி கண்ணகி கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் ஐந்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 
இதே போன்றும் இந்த ஆண்டும் இத்திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தின் தேனி, கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

பக்தர்கள் கேரளாவின் குமுளியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வனப் பாதை வழியாக நடந்தும், ஜீப் மூலமாகவும், சென்று வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் புளியங்குடியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்தும் கண்ணகி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,500க்கும் மேற்பட்ட இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியிலும், இரு மாநில வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

மங்கல தேவி கோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி அம்மன் பச்சை நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தமிழக, கேரள மாநிலத்தை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணகி அம்மனை வழிபட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com