ஹெச்.ராஜாவின் மருமகன் தன்னை மிரட்டி வருகிறார்: பரபரப்பு கடிதம் அனுப்பிய காரைக்குடி பாஜக நகர தலைவர்

ஹெச்.ராஜாவின் மருமகன் தன்னை மிரட்டி வருகிறார்: பரபரப்பு கடிதம் அனுப்பிய காரைக்குடி பாஜக நகர தலைவர்

தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஏமாற்றிவிட்டார் என்றும் தன்னை அவரது மருமகன் மிரட்டி வருவதால் கட்சி பணியில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று பாஜக தலைமைக்கு காரைக்குடி நகர தலைவர் கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
Published on

பா.ஜ.க முன்னணித் தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார்.  இந்த நிலையில் தனது சொந்த ஊர் காரைக்குடி என்பதால், நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியை அ.தி.மு.க கூட்டணியில் கேட்டுப் பெற்று ஹெச்.ராஜா போட்டியிட்டார்.

 அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் ஹெச்.ராஜா தோல்வியைத் தழுவினார். தன்னுடைய தோல்விக்கு பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் சரியாகப் பணியாற்றாததே காரணமென ஹெச்.ராஜா கட்சித் தலைமையிடம் புகாரளித்ததாகக் கூறப்படுகிறது. இது பாஜகவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.

 இந்த நிலையில் பா.ஜ.க-வின் காரைக்குடி பெருநகரத் தலைவர் சந்திரன் பாஜக தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் நான்காண்டுகளாக நகரத் தலைவராக நான் பணியாற்றிய காலத்தில் கட்சிக்காக எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்திருக்கிறேன். காரைக்குடியில் வேட்பாளராக போட்டியிட்ட ஹெச்.ராஜா தன்னுடைய தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும் சுய பரிசோதனை செய்து கொள்ளாமலும், தன்னுடைய தவறை மறைப்பதற்காக நகர் கமிட்டி மீது குற்றஞ்சாட்டுகிறார்.

 ஹெச்.ராஜாவின் மருமகன் சூரியநாராயணன் பல்வேறு நபர்கள் மூலமாக என்னை மிரட்டிவந்தார். பதவியில் நான் தொடர்ந்து நீடித்தால் என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நிகழும் என்று அஞ்சுகிறேன். ஆகவே, காரைக்குடி நகரத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.இதனால் பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com