
நேற்றைய தினம், தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.
ஆனால் நேற்றைய தினம் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 40 -பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை “இந்தக் கூட்டத்தில் விஷக்கிருமிகள் யாரேனும் நுழைந்தார்களா? ஆம்புலன்ஸ் எதற்காக நுழைந்தது? மின்தடை எதற்கு ஏற்பட்டது? போலீசார் எதற்கு லத்தி சார்ஜ் செய்தனர்? என சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
ஒரு கூட்டத்தில் தங்கள் தலைவனை பார்க்க வரும் நபர்கள் தலைவன் மீது செருப்பை வீச மாட்டார்கள். வெளி ஆட்கள்தான் இவ்வாறு செருப்பு வீசுவார்கள்.
நடிகனை பார்க்க கிராம மக்கள் அதிகளவில் வருவார்கள்தான்; வார நாட்களில் இந்த கூட்டம் நடந்திருந்தால் மக்கள் யாரும் குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்க மாட்டார்கள். வார விடுமுறை நாட்கள் என்பதால்தான் வீட்டில் உள்ள குழந்தைகளை விஜயை பார்க்க அழைத்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தில் தற்போதுதான் இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாகி வருகின்றனர். கூட்டங்களை ஒருங்கிணைக்க தமிழக வெற்றி கழகத்தில் முறையான தலைவர்கள் இல்லை.
வார இறுதியில் கூட்டம் வைத்ததால்தான் தற்போது குழந்தைகள் அதிகளவில் உயிரிழந்துள்ளார்கள். இதற்கு விஜய்தான் காரணம். விஜய் மீது குற்றச்சாட்டுகள் வைப்பதன் காரணமாக மட்டும், அவர்தான் முதல் குற்றவாளி என்றல்ல. கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது அரசுதான்.
விஜய்க்கும் அனுமதி கொடுக்காமல், மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்காமல் அரசு செயல்பட்டுள்ளது. இதற்கு அரசு வெட்கி தலை குனிய வேண்டும்.
இந்த துயர சம்பவத்திற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் மீதும் காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் தனது பயணத்தின் வடிவத்தை மாற்ற வேண்டும்.
விஜய் தற்போது வேதனையில் இருப்பார், அவரை யாரும் குற்றம் சாட்ட வேண்டாம். இது போன்ற பாதுகாப்பு இல்லாத இடத்திற்கு செல்வோர் உங்கள் குடும்பத்தை பற்றி யோசித்து பார்க்க வேண்டும். விஜய் பயணத்தின் வடிவமைப்பில் கோளாறு உள்ளது. நடந்த தவறை திருத்திக் கொண்டு விஜய் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
ஒரு முதலமைச்சர் இந்த நீதிபதிதான் எனக்கு வேண்டும்; இவர்தான் விசாரிக்க வேண்டும் என கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நபர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை. சிபிஐ விசாரணைதான் வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் 40 பேர் உயிரிழந்தும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதலில் முதலமைச்சர் அவர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு பிறகு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.