கிட்னி விற்பனை முறைகேடு: நீதிமன்றம் சொல்வது என்ன!?

கிட்னி விற்பனை முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்....
madras high court
madras high court
Published on
Updated on
1 min read

கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பின் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முடித்து வைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி விற்பனை முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கக் கோரி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், வாய்க்கால்காடு பகுதியைச் சேர்ந்த ஆதவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கிட்னி விற்பனை முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி அதன் நகலை சமர்ப்பித்தார்.

அப்போது தலைமை நீதிபதி, மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவு மாநிலம் முழுவதும் பொருந்துமா என கேள்வி எழுப்பினார். உயர் நீதிமன்றத்தின் நிர்வாக உத்தரவின் அடிப்படையில் மதுரை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவும் மாநிலம் முழுவதும் பொருந்தும் என்று தலைமை குற்றவியல் வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியம் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com