சர்ச்சையில் சிக்கிய விஜய் தேவரகொண்டா படம்!? “எச்சரிக்கை விடுத்த நாதக!! - உயர்நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன!??

சென்சார் போர்டு அனுமதித்த திரைப்படத்தை வேறு எந்த வகையிலும் தடுக்க முடியாது. ஜனநாயகத்தில் ...
kingdom movie poster
kingdom movie poster
Published on
Updated on
1 min read

கிங்டம் படம் திரையிடுவதை நாம் தமிழர் கட்சியினர் தடுப்பதாகக் கூறி, திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, பட விநியோக நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை, அதனால் இந்த வழக்கில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும். விசாரணையை நாளை தள்ளி வைக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் சங்கர், தமிழ் ஈழம் குறித்து கண்டனத்துக்குரிய வகையில் காட்சிகள் படத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. படத்திற்கு விளம்பரம் தேடுவதற்காகவே பாதுகாப்பு கேட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தினால் எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை எனவும், படத்தை பார்க்க வரும் ரசிகர்களை தடுக்கவில்லை எனக்கூறி மனு குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டார். 

இதையடுத்து நீதிபதி, சென்சார் போர்டு அனுமதித்த திரைப்படத்தை வேறு எந்த வகையிலும் தடுக்க முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்களை தெரிவிக்க அனைத்து தரப்பினருக்கும் உரிமை உள்ளது. எந்த போராட்டமாக இருந்தாலும் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபடக்கூடாது. படம் திரையிடுவதை தடுக்க கூடாது என தெரிவித்தார்.

மேலும், படத்தில் ஏதோ சொல்லி இருக்கிறார்கள் என்பதற்காக படத்தை தடுக்க முடியாது. மாறாக படத்துக்கு வழங்கிய சான்றிதழை ரத்து செய்யக்கோரி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம் அல்லது படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என பிரச்சாரம் செய்யலாம் என கூறி, பட வெளியீட்டு நிறுவனத்தின் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com