"விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு உதவிகள் செய்யப்படும்" கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு!

"விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு உதவிகள் செய்யப்படும்" கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் உதவி கோரினால் அதையும் செய்ய தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் இறந்துள்ளனர் என்று தகவல் வந்துள்ளது. அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களோடு ஐஏஎஸ் அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல் கேட்கப்பட்டுள்ளது. அவை கிடைத்தவுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. மேலும்சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து இதுவரை எட்டு பேர் தொடர்பு கொண்டுள்ளனர்' என தெரிவித்தார்

மேலும் மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளதாக கூறிய அவர், உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் உதவி புரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் உதவி கோரினால் அதையும் செய்ய தயாராக இருப்பதாக கூறிய அவர், விபத்து நடந்த இடத்திற்கு 2 மாவட்ட வருவாய் அலுவலர், 3 துணை ஆட்சியர், 3 வட்டாட்சியர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com