KN நேரு வீட்டில் ரெய்டு எதற்காக? “பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம்” - ஆவேசப்படும் ஸ்டாலின்!

4 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீட்டில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
KN நேரு வீட்டில் ரெய்டு: “பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம்” - ஸ்டாலின் ஆவேசம்
KN நேரு வீட்டில் ரெய்டு: “பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம்” - ஸ்டாலின் ஆவேசம்
Published on
Updated on
2 min read

திமுக மூத்த தலைவர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட பத்து இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று, திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து தற்போது தில்லை நகர் வீட்டிற்கு நேரு வந்துள்ளார்.

அவரது உதவியாளர் மணிகண்டன் இல்லம் ஸ்ரீரங்கம் பெரியார் நகரில் உள்ளது. அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனைக்கு காரணம் என்ன?

சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்) கேட்டு மிரட்டி வசூல் செய்ததாக வந்த குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே. என். நேரு, நகராட்சி நிர்வாகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.800 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான சோதனையாகவோ அல்லது டெண்டர் முறைகேடுகள் வழக்கு தொடர்பான சோதனையாகவோ இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சோதனைக்கான காரணம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

4 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீட்டில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலின் சொல்வது என்ன?

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையைக் கண்டித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக சோதனை நடத்தப்படுவதாகவும், திசைதிருப்பும் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் தளப் பதிவில், "உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.

ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும், குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில், வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.

கே.என். நேரு அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!" எனக் கூறியுள்ளார்.

KN நேரு வீட்டில் ரெய்டு: “பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம்” - ஸ்டாலின் ஆவேசம்
கச்சத்தீவு-வாட்ஜ் பேங்க் பரிமாற்றம்: காங்கிரஸ் சொல்லும் 1976 ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com