ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் ஊத்தங்கரையில் வரலாறு காணாத வகையில் 51 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தொடர் கனமழையால் பாம்பாறு அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அணையின் கீழ் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஊத்தங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் ஊத்தங்கரையில் இருந்து அரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் செல்வதால் சாலை தற்போது மூடப்பட்டுள்ளது.
மேலும், போச்சம்பள்ளியில் பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் கோணணூர் ஏரி நிரம்பி போச்சம்பள்ளி நான்கு ரோடு சாலை கடைகள் காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.