ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன்பட்டியைச சேர்ந்தவர் காளிகுமார். 33 வயதான இவர் சரக்கு வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் செப்டம்பர் 2-ம் தேதியன்று திருச்சுழி - ராமேஸ்வரம் சாலையில் சென்றபோது, திடீரென வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், காளிகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.
இதில் படுகாயமடைந்த காளிகுமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காளிகுமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில், காளிகுமார் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை சாலையை விட்டு நகரப் போவதில்லை என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி தலைமையிலான போலீசார் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த காளிகுமாரின் உறவினர்கள் சிலர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவலர்களை அடிக்க பாய்ந்தனர். இதனால் காவலர்கள் - போராட்டக்காரர்கள் இடையே கடுமையான தள்ளுமுள்ளு உண்டானது.
இந்த தகராறின்போது, டி.எஸ்.பி. காயத்ரியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் பளார் பளார் என சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட காளி என்கிற காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன், வீரசூரன், அய்யாவு என்கிற வேல்முருகன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொதுமக்கள் போராட்டத்தில் போலீஸ் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட இந்த சம்பவத்தால் அருப்புக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.