அப்போ இனிச்சுச்சு.. இப்போ கசக்குதா? பட்டத்தை துறந்த நயன்தாராவை துரத்தும் விமர்சனம் - பின்னணி என்ன?

அவர்கள் செய்தது ஏற்கப்பட்ட போது, நயன்தாரா செய்வது மட்டும் ஏன் தவறாகிறது?
lady super star Nayantara issue
lady super star Nayantara issue
Published on
Updated on
2 min read

மார்ச் 4, 2025 அன்று தனது X தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார் நயன்தாரா. "உங்கள் அன்பால் என்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைத்தீர்கள். அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஆனால், இனி என்னை 'நயன்தாரா' என்று மட்டும் அழைக்கவும். என் பெயரே என் இதயத்துக்கு மிக நெருக்கமானது. பட்டங்களும் புகழ்ச்சிகளும் மதிப்பு மிக்கவை தான், ஆனால் அவை சில நேரங்களில் நம்மை நம் தொழிலில் இருந்தும், ரசிகர்களுடனான பிணைப்பில் இருந்தும் பிரித்து விடுகின்றன" என்று அவர் குறிப்பிட்டார். "சினிமா நம்மை ஒன்றிணைக்கும் ஒரு பாலம். உங்கள் ஆதரவும் என் உழைப்பும் எப்போதும் நிலைத்திருக்கும்" என்று முடித்தார்.

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.

ரசிகர்களின் சிலரின் கோபம்: "இப்போது ஏன் இந்த முடிவு?" என்பதே.

இதுகுறித்து சில ரசிகர்கள் தங்கள் சமூக தள பக்கங்களில், "லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவர் உச்சத்தில் இருக்கும் போது மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். படங்களில் இந்த பட்டத்தை பயன்படுத்தி பெருமைப்பட்டார். இப்போது அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், அவரது அலை குறைந்து விட்டதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்" என்று புகார் வாசிக்க, மற்றொரு தரப்பு அவருக்கு ஆதரவாகவும் வாதிட்டு வருகிறது.

அதாவது, "அஜித் தன்னை 'தல' என்று அழைக்க வேண்டாம் என்று சொன்னார். கமல் ஹாசன் 'உலகநாயகன்' என்ற பட்டத்தை தவிர்க்க சொன்னார். அவர்கள் செய்தது ஏற்கப்பட்ட போது, நயன்தாரா செய்வது மட்டும் ஏன் தவறாகிறது?" என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், "ஒரு நடிகர் அல்லது நடிகை தனது பட்டத்தை வேண்டாம் என்று சொல்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை. நயன்தாரா தன்னை ஒரு சாதாரண மனிதராக பார்க்க விரும்புகிறார். இதில் தவறு இல்லை" என்றும், "அவர் தனது பெயரை மட்டும் வைத்து தனித்து நிற்க விரும்புகிறார். இது பாராட்டப்பட வேண்டிய முடிவு" என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னணியில் என்ன நடந்தது?

நயன்தாராவின் இந்த முடிவுக்கு பின்னால் சில காரணங்கள் இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டம் அவருக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ரஜினிகாந்தின் "சூப்பர் ஸ்டார்" பட்டத்துடன் ஒப்பிடப்பட்டு, "அவர் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்கிறார்" என்று சிலர் விமர்சித்தனர். மேலும், 2024 டிசம்பரில் ஒரு பேட்டியில், "இந்த பட்டத்தால் எனக்கு நிறைய பின்னடைவு ஏற்பட்டது. என் படங்களில் இதை பயன்படுத்த வேண்டாம் என்று தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தேன்" என்று அவர் பகிர்ந்தது நினைவிருக்கலாம்.

அதே நேரத்தில், அவரது சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது, அவரது முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். "நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடெய்ல்" என்ற ஆவணப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும், அவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால், தனது பிம்பத்தை மாற்ற முயல்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அஜித், கமல் vs நயன்தாரா: வித்தியாசம் என்ன?

அஜித் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் தங்கள் பட்டங்களை துறந்த போது, அது பெரும்பாலும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அஜித், "தல" என்ற பட்டத்தை விடுத்து, தனது ரசிகர் கூட்டங்களையே கலைத்தார். கமல், "உலகநாயகன்" என்ற பட்டத்தை தவிர்க்க சொல்லி, தன்னை ஒரு சாதாரண கலைஞனாக காட்டிக்கொள்ள முயன்றார். ஆனால், நயன்தாராவின் இந்த முடிவு ஏன் விமர்சனத்துக்கு உள்ளாகிறது? என்பதே கேள்வி

நயன்தாராவின் இந்த முடிவு தொடர்பாக, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பரிமாறப்பட்டாலும், இது அவரது தனிப்பட்ட விருப்பம் என்பதை மறுக்க முடியாது. அவரது அடுத்த படங்களான "டெஸ்ட்", "மன்னங்கட்டி சின்ஸ் 1960" போன்றவை வெற்றி பெற்றால், இந்த சர்ச்சை மறக்கப்படலாம்.

"லேடி சூப்பர் ஸ்டார்" பட்டத்தை உதறிய நயன்தாரா, இனி தனது பெயரால் மட்டுமே பேசப்பட விரும்புகிறார். சாதிக்கவும் விரும்புகிறார் என்பதே நிதர்சனம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com