நகர திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காததால் அரசு அலுவலகம் ஜப்தி ....? நீதிமன்றம் அதிரடி..!

நகர திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காததால் அரசு அலுவலகம் ஜப்தி ....? நீதிமன்றம் அதிரடி..!
Published on
Updated on
1 min read

திருநள்ளாறு கோவில் நகர திட்டத்திற்காக நில கையகப்படுத்தியதில் பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியர் வருவாய் அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. 

காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு திருநள்ளாரை கோயில் நகரமாக அறிவித்தது. கோயில் நகர திட்டத்திற்கு திருநள்ளாறு பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை புதுச்சேரி சுற்றுலா துறைக்கு காரைக்கால் வருவாய்த்துறை கையகப்படுத்தி கோயில் நகர திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக காரைக்கால் வருவாய்த்துறை வழங்க வேண்டும் எனவும் காரைக்கால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால் மாவட்ட நிர்வாகமோ புதுச்சேரி அரசோ இதுவரை அந்த வழக்கு சம்பந்தமாக மேல்முறையிடோ அல்லது நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையோ வழங்காத காரணத்தால் நில உரிமையாளர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றம், துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது. 

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் நீதிமன்ற ஊழியர்கள் நில உரிமையாளர்களின் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் இரண்டு மாதங்களுக்குள்ளாக நில உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடுத் தொகையை புதுச்சேரி சுற்றுலாத் துறையில் இருந்து பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com