

லண்டனில் படித்து வந்த இளம்பெண்ணை, நெல்லையைச் சேர்ந்த அவரது காதலன் கோவைக்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்று நெல்லையில் திருமணத்தைப் பதிவு செய்ய முயன்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காதலனின் தந்தை, சித்தப்பா ஆகிய 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் இசக்கி பாண்டி. இவரும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெண்ணின் வீட்டார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பெண்ணின் குடும்பத்தினர், அவரை மேல்படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும், இசக்கி பாண்டியும் அந்தப் பெண்ணும் செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். இதனிடையே, பெண்ணுக்கு அவரது வீட்டில் வேறு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன.
இதை அடுத்து, காதலனின் திட்டப்படி அந்தப் பெண் லண்டனில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து, அங்கிருந்து கொச்சின் விமான நிலையம் வந்துள்ளார். அங்கு காத்திருந்த இசக்கி பாண்டியின் உறவினர்கள், காதல் ஜோடியை காரில் கோவைக்கு அழைத்து வந்துள்ளனர்.
கோவையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவையில் திருமணத்தைப் பதிவு செய்ய முயன்றபோது, பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது. பெண்ணின் உறவினர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்ததால், கோவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் காதல் ஜோடியை அவர்களது சொந்த ஊரான நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவையில் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்ட நிலையில், இன்று நெல்லையில் அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக இசக்கி பாண்டி தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணின் வீட்டாருக்கும், இசக்கி பாண்டி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தகராறு மோதலாக மாறியது. இதில் காயமடைந்த இசக்கி பாண்டியின் தந்தை செல்வம் மற்றும் அவரது சித்தப்பா மணிகண்டன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது நிரம்பி 3 நாட்கள்தான் ஆகிறது!
இருந்தபோதும் இசக்கி பாண்டியன் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசி வந்த நிலையில் 18 வயது முடிந்த மூன்று நாட்களே ஆன நிலையில் அவரை இந்தியா வரவழைத்து திருமணம் செய்து கொண்டதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் என அந்த பெண்ணின் தந்தை கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.