அரசு முதியோர் இல்லங்கள்; தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசு முதியோர் இல்லங்கள்; தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கல் சசில் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், 
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, மாநில அரசு, மாவட்டத்துக்கு ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, தமிழகத்தில் அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாகவும், அதற்கு  அரசு, முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்று பதிலளித்ததாகக் கூறியுள்ளார்.

முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கி வருவதாகவும் அரசு விளக்கமளித்துள்ளதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறி விட்டதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.

அதற்கு, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com