

உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், நான்கு சிறுபான்மை கல்லூரிகள் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல் பெற வேண்டும். கல்லூரிகளில் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நியமனத்துக்கு தேர்வுக்குழு அமைக்க வேண்டும் என கடந்த 2010 ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு விதிகள் வகுத்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த லயோலா, ஸ்டெல்லா மேரீஸ், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி ஆகிய நான்கு தன்னாட்சி அந்தஸ்து கல்லூரிகள் நியமித்த 300க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் கோரி, சென்னை பல்கலைக்கழகத்துக்கும், உயர்கல்வித் துறைக்கும் விண்ணப்பித்திருந்தன.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, தேர்வுக்குழு குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறி, ஒப்புதல் கோரிய விண்ணப்பங்களை அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதனால் உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி, நான்கு கல்லூரிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி 2023 மார்ச் மாதம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகலை தமிழக உயர்கல்வித் துறைக்கும், சென்னை பல்கலைக் கழகத்துக்கும் ஏப்ரல் மாதமே அனுப்பிய நிலையில், இதுவரை அமல்படுத்தவில்லை என, நான்கு தன்னாட்சி அந்தஸ்து கல்லூரிகள் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதுசம்பந்தமாக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, உயர்கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனர், கல்லூரி கல்வி இணை இயக்குனர் மற்றும் சென்னை பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 9 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.