தனியார் நிறுவனத்தை காப்பாற்ற முயலும் மாநகராட்சி!? மூன்றாவது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம்!!

‘அவர்லேண்ட்’ தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மதுரை மாநகராட்சி...
sanitation worker's protest
sanitation worker's protest
Published on
Updated on
2 min read

 திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், ‘அவர் லேண்ட்’ ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய கோரியும் மதுரையில் 3 -ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் "மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்தவிடாமல் ஜனநாயக மீறலில் ஈடுபடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் எதற்காக அவர்லேண்ட்  நிறுவனத்தை காப்பாற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் துடிக்கின்றனர் என தெரியவில்லை" என தொழிற்சங்கத்தினர் பேட்டி அளித்துள்ளனர் 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தினச்சம்பளமாக ரூ.26ஆயிரத்தை வழங்கிட வேண்டும், அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் -18 ஆம் தேதி  நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 

மேலும் மதுரை மாநகராட்சி  துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்  கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளையும், முன் வைத்த கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ‘அவர்லேண்ட்’ தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மதுரை மாநகராட்சி ஆணையாளர், நகர் நல அலுவலர் மற்றும் உதவி நகர் நல அலுவலர் உள்ளிட்டோரிடம் நான்கு முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அனைத்து பேச்சுவார்த்தைகளும்  தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் துணையானையாளர் நகர் அலுவலர் ஆகியோர்  கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்திய பின்னர் கோரிக்கைகளில் சிலவற்றை குறித்து கடிதம் மூலமாக தூய்மைப் பணியாளர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் இது போன்ற விளக்கத்தை ஏற்க முடியாது என கூறி தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மதுரை மாநகராட்சி வளாகத்தில் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தபோது, அப்போது அங்கு குவிந்திருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அருகில் சென்றவுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தர தரவென  இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன நிர்வாகி தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர் 

ஆனால் காவல்துறையினர் கூறியபடி பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வருகை தராத நிலையில் இன்று மூன்றாவது நாளாக மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் அமர்ந்து காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மூன்று நாள் காத்திருப்பு போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி இருப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்வோம் என கூறி ‘அவர்லேண்ட்  நிறுவனத்தினர்’ மிரட்டல் விடுப்பதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் பேசிய போது அவர்லேண்ட் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் செய்து வருகிறோம். ஆனால் போராட்டத்தை நடத்த விடாமல் காவல்துறையினரும் மாநகராட்சியும் தடுக்கின்றார்களே தவிர அவர்லேண்ட் நிறுவனத்தின் மீது இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை, நடவடிக்கை என்ன அவர்களை விசாரிக்க கூட இல்லை, இவர்களின் இந்த போக்கு  பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com