"மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை : நடந்தது இதுதான் " ...! சுங்கத்துறை விளக்கம்.

"மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை  :  நடந்தது இதுதான் " ...!   சுங்கத்துறை விளக்கம்.
Published on
Updated on
2 min read

மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை எனவும்,  அபராதம் வசூலித்து நகைகள் ஒப்படைக்கப்பட்டதாகவும்  சுங்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து வந்த தம்பதியிடம் விதிமுறைகளை மீறி நகைகள் அணிந்து வந்ததாகவும் தாலி செயினை கழற்ற சொன்னதாக மலேசிய பெண் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சென்னை விமான நிலைய சுங்க ஆணையரகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில்,  

மலேசிய வாழ் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மலேசியாவில் இருந்து விமான நிலையம் வந்திறங்கியபோது,  தனக்கு விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றதாகச் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு இருந்தார்.

மேலும், அப்பெண்மணி தனது கணவருடன் வந்திறங்கியபோது சென்னை விமான நிலையத்தில் இருந்த சுங்க அதிகாரிகள் தங்கத்தால் செய்த தனது தாலியை கழற்றச் சொன்னதாகவும். அவர் மறுத்ததால் இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இது பொய்யானது  உண்மைக்கு புறம்பானது. உண்மையில் நடந்ததைத் தெளிவுபடுத்துவது தேவையாகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் தங்க நகைகளை அணிந்து வெளியேற முற்படுவதைக் கவனித்தனர்.

அந்த நகைகளைக் குறித்த விவரங்களைத் தருமாறு இரு பயணிகளையும் கேட்ட போது சொந்த நகைகள் எனக்கூறி விவரங்களை அளிக்க மறுத்து விட்டனர். பெண் பயணியிடம் தாலியை கழற்றுமாறு அதிகாரிகள் கூறவில்லை. 

அதிகாரிகள்  சட்டப்பணியைப் செய்ய  ஒத்துழைக்காமல் அவர்  வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார். சுங்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் சுங்க விதிகளைப் பற்றி விளக்கிய பிறகு அப்பெண்ணின் கணவர் மட்டும்  அணிந்திருந்த தங்கச்சங்கிலி மற்றும் காப்பை சோதனைக்கு உட்படுத்த அனுமதித்தார். 

அந்த தங்க நகைகளின் எடை 285 கிராம் (சுமார் 35 பவுன்) அதன் இந்திய மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும்.. அதன் மேல் ரூ. 6.5 லட்சம் சுங்க வரியாகச் செலுத்த வேண்டும் எனக் கணக்கிடப்பட்டது. அந்தச் சுங்க வரியை கட்டுவதற்குப் பயணிகள் மறுத்து விட்டனர். எனவே, அந்த 285 கிராம் கைப்பற்றப்பட்டு, பயணிகளிடம் ரசீது வழங்கப்பட்டது.

மேலும் அந்நகைகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுச் சுங்க சட்ட விதிகளின்படி அபராதத் தொகை விதிக்கப்பட்டது.  அபராத தொகை செலுத்திய பின்னர் மலேசியா செல்லும் போது அந்நகைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

பயண உடைமைகள் விதிகள் படி இந்தியாவில் வசிப்போர் மற்றும் இந்திய வம்சாவளி வெளிநாட்டுப்பயணிகள் ரூ. 50,000/- வரை மதிப்புள்ள நகைகளைச் சுங்கவரி செலுத்தாமல் இந்தியாவிற்குள் கொண்டு வரலாம் என கூறி உள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com