

சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதில் முக்கிய பங்கு தூய்மையாளர்களுக்கு உண்டு. தூய்மை பணியாளர்களை அரசு கவுரவித்து பல உதவிகளையும் திட்டங்களையும் அறிவித்து நடைமுறை படுத்தி வருகிறது. ஆனால் தூய்மை பணியாளர்கள் மீதான பாலியல் தொல்லை சம்பவங்கள் சமீபத்தில் தொடர்ந்து நடந்து வருவது வேதனை அளிக்கிறது.
சென்னை அடையாறு மேம்பாலம் கீழே தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் தூய்மை பணியாளர் ஒருவரிடம் ஆபாச செய்கை காட்டிய ஆந்திர இளைஞர் கைது செய்யப்பட்டார். இதே போல கடந்த 8-ஆம் தேதி எழும்பூர் பகுதியில் பெண் தூய்மை பணியாளரை ஆபாசமாக திட்டிய ஜம்மு காஷ்மீர் இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட பெண் தூய்மை பணியாளர் ஒருவரின் சேலையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முத்தியால்பேட்டை பவளக்கார தெருவில் நேற்று காலை பெண் தூய்மை பணியாளர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது முதியவர் ஒருவர் அந்த பெண் தூய்மை பணியாளரிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார், இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தாலும் உடனே சுதாரித்துக்கொண்டு முதியவரை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து நடந்ததை அறிந்து பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
"குடும்ப சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் தான் தூய்மை பணியாளர் பணிக்கு வந்தேன். ஆனால் பாதுகாப்பு இல்லாத நிலையை தான் உணர்கிறேன். என் தந்தை வயதுடையவர் அவர். இது போன்று அநாகரீகமாக நடந்து கொண்டது வேதனையை அளிக்கிறது. வயதானவர் என்னை டார்ச்சர் செய்து ஆபாசமாக பேசி என்னை தொல்லை கொடுத்தார். பணம் தாரேன், போன் நம்பர் கொடு போன்று அறுவறுக்கத்தக்க வார்த்தைகளை பேசினார். அதனால் தான் கோபம் வந்தது. அடித்து உதைத்தேன்" என்று பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "நான் தைரியமாக இருந்ததால் எதிர்த்து சண்டை போட்டேன். கோழை பெண்ணாக இருந்தால் முடியாது. அது போல இருக்க கூடாது. தூய்மை பணியாளர்கள் பாதுகாப்போடு இருந்தாலும் இது போன்ற காம கொடூரன்களால் தொல்லை ஏற்படுகிறது. பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் பயப்படக்கூடாது. எதிர்த்து போராட வேண்டும். எனக்கு பொதுமக்கள் உதவி செய்தனர். காவல்துறை இது போன்றவர்களை சும்மா விடக்கூடாது" என்று பாதிக்கப்பட்ட ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.
கைதானவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் 56 வயதுடைய ஜாகீர் உசேன் என்பதும், ராமநாதபுரத்தைச் சேர்ந்தர் என்பதும் தெரிய வந்தது. இவர் அதே தெருவில் சாலையில் செல்லும் பெண்கள் சிலரை கிண்டல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.