செல்வப்பெருந்தகைக்கு மாணிக்கம் தாகூர் கொடுத்த 'அச்சமில்லை' பதிலடி! முற்றும் உட்கட்சி மோதல்! கிளைமேக்ஸ் நோக்கி!

மல்லிகார்ஜுன கார்கேவிடம் செல்வப்பெருந்தகை புகார் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின...
செல்வப்பெருந்தகைக்கு மாணிக்கம் தாகூர் கொடுத்த 'அச்சமில்லை' பதிலடி! முற்றும் உட்கட்சி மோதல்! கிளைமேக்ஸ் நோக்கி!
Published on
Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது சமூக வலைதளங்களில் பகிரங்க மோதலாக வெடித்துள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மகாகவி பாரதியாரின் 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற பாடல் வரிகளைப் பதிவிட்டுள்ளார். தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் மாணிக்கம் தாகூருக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலின் பின்னணியாகத் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. திமுக தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி வந்த நிலையில், இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் செல்வப்பெருந்தகை புகார் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

செல்வப்பெருந்தகை அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை விட மாணிக்கம் தாகூர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார். மேலும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் பேசி வருவதைத் தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தலைவர் கார்கே தன்னிடம் கூறியதாகவும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டிருந்தார். இத்தகைய சூழலில், யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் மாணிக்கம் தாகூர் பாரதியார் பாடலைப் பதிவிட்டுள்ளது செல்வப்பெருந்தகைக்கு அளிக்கப்பட்ட நேரடிப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் கட்சியான திமுகவுடனான உறவு குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் இருவேறாகப் பிரிந்து கருத்து தெரிவிப்பது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் செல்வப்பெருந்தகை கூட்டணி தர்மத்தைக் காக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க, மறுபுறம் மாணிக்கம் தாகூர் போன்றோர் அதிகாரப் பங்கீடு அவசியம் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த அதிகாரப் போட்டி தற்போது பாரதியார் பாடல் வரிகள் மூலம் சமூக வலைதளப் போராக மாறியிருப்பது காங்கிரஸ் மேலிடத்திற்குப் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com