விவசாயத்திற்கு திறக்கப்படாமல், தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிடப்படும் மணிமுத்தாறு அணை நீர்!

விவசாயத்திற்கு திறக்கப்படாமல், தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிடப்படும் மணிமுத்தாறு அணை நீர்!
Published on
Updated on
1 min read

நெல்லை:  கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால், விவசாய பணிகள் தொடங்குவதில் தாமதமாகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள உச்ச நீர்மட்டம் 118 அடி கொண்ட மாவட்டத்தின் பிரதான அணையாக உள்ளது மணிமுத்தாறு அணை. 

மணிமுத்தாறு அணையின் 40 அடி கால்வாய் பெருங்கால் பாசனம் மூலம் ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சுமார் 2700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

இந்த நிலையில் கடந்த பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினாலும், கோடை வெயிலில் தாக்கத்தினாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து சுமார் 55 மட்டுமே காணப்படுகிறது. மேலும் அணையில் இருந்து 275 கன அடி நீர்வெளியேற்றபடுகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜூன் 1 தேதி தண்ணீர் பெருங்கால் மதகில் தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது வரை அணையில் போதிய நீர்இருப்பு இல்லை எனக்கூறி தண்ணீர் திறப்பதில் தாமதம் நிலவுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மேலும் தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, " இந்த அணை, இப்பகுதி விவசாயிகளின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் பெருங்கால் மதகு மூலம் இரு பருவ சாகுபடி நடைபெறுகிறது. அணை கட்டும் போதே ஜுன் 1 -ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என இதுதொடர்பாக நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்ணீர் 40 அடிக்கு கீழ் சென்றாலும் இந்த கால்வாய் வழியாக மோட்டார், டிராக்டர் உதவியுடன்  விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது" என்றனர்.

மேலும், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்காக இந்த அணையில் இருந்து தற்போது 275 கன அடி நீர் கொண்டு செல்லப்படுகிறது.ஆனால் விவசாய நிலங்களுக்கு வெறும் 30 கன அடி நீர் திறந்துவிட்டாலே போதும். எனவே விவசாயிகள்  அரசு அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனக் கூறினார்கள்.  

அரசு உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தண்ணீர் திறக்க வேண்டும், தவறும் பட்சத்தில்  போராட்டமும் நடத்த தயாராக உள்ளோம் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com