“தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” - MLA கைது விவகாரத்தில் த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே...
vijay vs stalin
vijay vs stalin
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசும் போது, “சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு (விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்புவோம், சட்டமன்றத்தை கூட்டிப்பார்” என்று முதல்வர் விஜய் குறித்து பேசி இருந்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் MLA மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தினர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து இன்று காலை புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்ததை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் அவரது சமூக வலைதள பக்கத்தில் “ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.

"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்? கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படை சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும் கூட மறுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.” என பதிவிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com