

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமான ஒன்று என்பதை தமிழ் நாடு நமக்கு அறிந்தது. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது.
இதற்கு இடையில் கடந்த செப் 15ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் என கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார்.
மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர் சிலரின் பதவிகளும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்து அப்போதே அவருக்கு ஆதரவளித்து வந்தனர்.
ஒரே காரில் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் !!
முத்துராமலிங்கதேவரின் 118வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல முக்கிய தலைவர்கள் மதுரையில் கூடியிருந்தனர். இதில் தமிழிகக் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொடர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் செங்கோட்டையன், பாஜக -வின் நயினார் நாகேந்திரன், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பசும்பொன்னில் கூடி அங்குள்ள தேவர் சிலைக்கு மரியாதையை தெரிவித்தனர்.
தலைவர்கள் பொது வெளியில் கூடும்போது, அவர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாக கவனிக்கப்படுகின்றன. இன்றைய தினம் தமிழக அரசியலில் அடுத்தடுத்த பேசுபொருளுக்கான குறியீடுகளை தலைவர்கள் விட்டுச்சென்றனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் நேற்று பயணம் செய்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த செயல் எடப்பாடியை கடுப்பேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று காலை மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினர்.
செங்கோட்டையன் பதவி பறிப்பு!!
இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ -வான செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்தான ஆலோசனை காலை சேலத்தில் நடத்தப்பட்டது, அதன் பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த அறிவிப்பில், “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. K.A.செங்கோட்டையன், M.L.A.இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
இது யாருக்கு பலவீனம்!!
மேலும் கொங்கு மண்டலத்தின் அதிமுக முகமாக எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அறியயப்பட்டவர் செங்கோட்டையன். மேலும் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு கட்சியின் பொருளாளராக அறிவிக்கப்பட்டனர். எம்ஜிஆர் ஜெயலலிதா காலம் தொட்டு கட்சிக்கு விசுவாசியாக இருந்தவர்.
காலப்போக்கில் அதிமுக -வில் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சிக்கு பிறகு செங்கோட்டையன் ஓரம்கட்டப்பட்டார். இது கொங்கு பிராந்திய போட்டி என்றும் சில விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் இதுபோன்ற மூத்த தலைவர்களை தொடர்ந்து எடப்பாடி இப்படி நீக்குவது அவருக்குத்தான் ஆபத்து, மேலும் இது கட்சியையும் மேலும் பலவீனப்படுத்தும். தேர்தல் சமையத்தில் ஒற்றுமைதான் முக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி சிதறினால் எடப்பாடி இதற்கு மேல் தலைதூக்குவது கடினமாகிவிடும்” என சிலர் கூறி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
