பாரம்பரிய சிலம்பாட்டத்துடன் தொடங்கிய மிலாது நபி சமய நல்லிணக்க ஊர்வலம்...!

பாரம்பரிய சிலம்பாட்டத்துடன் தொடங்கிய மிலாது நபி சமய நல்லிணக்க ஊர்வலம்...!
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பாரம்பரிய சிலம்பாட்டத்துடன் மிலாது நபி சமய நல்லிணக்க ஊர்வலம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மிலாது நபி கமிட்டி சார்பாக 16 வது ஆண்டு மிலாது நபி சமய நல்லிணக்க ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது பாரம்பரிய சிலம்பாட்டம் தப்ஸ் மற்றும் பாடல்களுடன் சிறப்பாக நடைபெற்றது. ஊர்வலம் மேலப்பாளையம் வி எஸ் டி பள்ளிவாசலில் தொடங்கி, மேலப்பாளையம் பஜார் திடலில் நிறைவடைந்தது.

இதே போல் தைக்கா வாய்க்கால் பாலம் அருகே துவங்கிய மற்றொரு ஊர்வலம் காஜா நாயகம் தெரு, ஜின்னா திடல், அரசு மருத்துவமனை, புதுமனை குத்பா பள்ளிவாசல் வழியாக பஜார் திடலை வந்தடைந்தது. இந்த ஊர்வல நிகழ்ச்சியில் மதரசாவை சேர்ந்த மாணவ மாணவிகள் மார்க்க பாடல்களை பாடியும், சிறுவர்கள் சிலம்பங்களை சுற்றிக் கொண்டும் ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.

முன்னதாக மேலப்பாளையம் பஜார் திடலில் இஸ்லாமிய புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பாரம்பரிய சிலம்பாட்ட நிகழ்ச்சி, கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இறுதியாக பஜார் திடலில் உத்தம திருநபி உதய தின விழா மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையிலிருந்து துவங்கிய மிலாது நபி ஊர்வலம் பஜாா் திடலில் நிறைவு பெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த மிலாதுநபி ஊர்வலத்தை முன்னிட்டு மேலப்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com