"கொரோனாவுக்குப் பின் இளம் வயது உயிரிழப்பு அதிகரிப்பு" அமைச்சர் மா.சு. தகவல்!

"கொரோனாவுக்குப் பின் இளம் வயது உயிரிழப்பு அதிகரிப்பு" அமைச்சர் மா.சு. தகவல்!
Published on
Updated on
1 min read

கொரோனாவுக்குப் பின்னர் இளம் வயதினரின் மரணம் அதிகரித்து வருகிறது என தமிழ்நாடு சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை, அடையார் மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி பகுதியில் பறக்கும் ரயில் மேம்பாலத்திற்கு கீழே  உள்ள பூங்காவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பருவமழைக் காலங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு தற்போது அதிகரித்து வருவது உண்மைதான். இதற்காக சென்னை, எழும்பூர் கண் மருத்துவமனையில் பிரத்யேக சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின்றி பொதுமக்கள் சொட்டு மருந்து உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது. கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெளியில் வருவது, கண்களை கசக்குவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். விரைவில் கண் மருத்துவமனைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவுக்குப் பின்னர் இளம் வயதினரின் மரணம் அதிகரித்து வருகிறது. இதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் மாரடைப்பு உள்ளாவர்களுக்கு தொடக்க நிலையில் முதலுதவி நடவடிக்கையாக லோடிங் டோஸஸ் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தும் பொதுமக்கள் தங்களுக்கு அது உதவிகரமாக இருப்பதாக கூறுகின்றனர் என தெரிவித்தார். 

மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் இலவசமாக ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதற்காகதான் ஸ்கேன் எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. தனியார் - அரசு பங்களிப்பு திட்டத்தில் சில மருத்துவமனைகளில் ஸ்கேன் செண்டர்கள் உள்ளன. அவற்றிலும் வருபவர்களுக்கு இலவசமாக ஸ்கேன் எடுத்து கொடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தனியார் - அரசு பங்களிப்பு திட்டத்தில் நிறுவப்பட்டுள்ள  ஸ்கேன் செண்டர்களில் பயனாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் மட்டுமே பயனடைய செய்ய வேண்டும். அதனை மீறி செயல்படும் ஸ்கேன் செண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், திமுக மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com