“திரையரங்கில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் முகமது பர்வேஸ்” - முதல்வர் விஜய் அறிமுகக் காட்சியை பார்த்து கண்ணீர் விட்டு நெகிழ்ச்சி!

தனது கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக்கொண்டு திரைப்படத்தை தொடர்ந்து பார்த்த அந்த தருணம்...
Mohammed Parvez
Published on
Updated on
1 min read

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 7 திரையரங்குகளிலும், புதுக்கோட்டை நகரில் மட்டும் 3 திரையரங்குகளிலும் படம் வெளியிடப்பட்ட நிலையில், அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு திரண்டு மேளதாளம், பட்டாசு, பாலாபிஷேகம், நடன நிகழ்ச்சிகள் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கடந்த காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகவும், பின்னர் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்பட்ட முகமது பர்வேஸ், தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் பிற மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

தனது அரசியல் பொறுப்பைத் தாண்டி, பழைய ரசிகராகவே ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்க்க புதுக்கோட்டை திரையரங்கிற்கு ரசிகர்களுடன் வந்த அவர் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், திரையரங்கிற்குள் செல்ல சில நிமிடங்கள் சிரமம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மற்றும் ரசிகர்களின் உதவியுடன் பின்னர் அவர் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார். திரையரங்கிற்குள் நுழைவதற்கு முன் செய்தியாளர்கள் அமைச்சரிடம், "ஒருகாலத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக இருந்த நீங்கள், இன்று முதல்வர் விஜய் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறீர்கள். அதே தலைவரின் திரைப்படத்தை பார்க்க வந்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முகமது பர்வேஸ், "அரசியல் என்பது வேறு... இது வேறு. முதலில் திரைப்படத்தை பார்த்துவிட்டு பிறகு பேசுகிறேன்" என்று கூறிவிட்டு திரையரங்கிற்குள் சென்றார்.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திரையில் முதல்வர் விஜய் தோன்றிய காட்சியை பார்த்த அமைச்சர் முகமது பர்வேஸ், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு முழு ரசிகராக படத்தை பார்த்து மகிழ்ந்தார். தனது கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக்கொண்டு திரைப்படத்தை தொடர்ந்து பார்த்த அந்த தருணம், அருகில் அமர்ந்திருந்த ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு காலத்தில் ரசிகராக தனது தலைவருக்காக பணியாற்றியவர், இன்று அதே தலைவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தபடியே ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து கண்கலங்கிய சம்பவம் புதுக்கோட்டை திரையரங்கில் பேசுபொருளாக மாறியது. மேலும் தற்போது அமைச்சர் கண்ணீருடன் படம் பார்த்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com