வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சரின் வழக்கு...! உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்...!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சரின் வழக்கு...! உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்...!
Published on
Updated on
1 min read

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001-2006 ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்தும் விசாரிக்க அதிகாரம் வழங்கி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கப் பிரிவுக்கு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துக்களை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் 2009 ஆம் ஆண்டு திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துவிட்டதால், அந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி, மறு உத்தரவு வரும்வரை அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com