

2025 ஐபிஎல் போட்டியின்போது தற்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் வெள்ளை நிறப் பொடியைக் கையாள்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான விவகாரத்தைத் தொடர்ந்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் வலியுறுத்தி சென்னை மற்றும் திருவள்ளூரில் திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வேப்பேரி டவுட்டன் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை முன்கூட்டியே அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும், முன்னாள் அமைச்சர் மா சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, மேயர் பிரியா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் மற்றும் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீசார், 50-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து போராட்டத்தை கலைத்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் மற்றொரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சர் சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் அளித்த விளக்கம் உண்மைக்கு புறம்பானது என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், துணைக் கண்காணிப்பாளர் கலியன் தலைமையிலான போலீசார் மேடை அமைக்க தடை விதித்தனர். இருப்பினும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ். சந்திரன், திருவள்ளூர் எம்.எல்.ஏ. விஜி ராஜேந்திரன் உள்ளிட்டோர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.
சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சரத்குமார், அது தனது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குக் கொடுப்பதற்காக ஒரு மாத்திரையை நசுக்கிய காட்சிதான் என்றும், போதைப்பொருளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தார். இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பெண் வழக்கறிஞர் சரண்யா, அமைச்சர் சரத்குமார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் அதிகாரப்பூர்வ புகாரும் அளித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.