
மரக்காணத்தில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கான நிவாரணத் தொகையை அமைச்சர்கள் நேரில் வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, இதுவரை, 14 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர். அத்துடன், முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினர்.
இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து, உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு, அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கினார்.