

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் VS பாபுவின் வெற்றியை சொல்லாது என்று அறிவிக்க கோரி திமுக தலைவரும் முன்னாள் முதல்வரும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மு க ஸ்டாலின் எதிர்த்து போட்டியிட்ட தவெக V S பாபுவின் வெற்றியை ரத்து செய்து, தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரி மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தொகுதியில் பதிவான VVPAT சீட்டுகளை 100 சதவீதம் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் வெற்றியை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்து சவால் விட முடியாது என்றும், அதற்கென தேர்தல் மனுவே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
2024-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தேர்தலில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைப் பிடித்த வேட்பாளர், தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீதத்தை சரிபார்க்க கோரிக்கை மனு கோரலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 286 EVM-களில் 5 சதவீதமான 14 இயந்திரங்களைச் சரிபார்க்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், மே 4-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாம் கோரிக்கை வைத்ததாக ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், EVM-களின் மெமரி மற்றும் மைக்ரோகண்ட்ரோலர் உள்ளிட்டவை தொடர்பாக சரிபார்ப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் தாமதம் செய்ததாக ஸ்டாலின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், சட்டப்படி தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டிய 45 நாள் காலக்கெடுவுக்குள் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் வாதிடப்பட்டது. எனவே, தாமதத்திற்கு எனது தரப்பு காரணமல்ல என்பதால், தனக்கு உரிய சட்ட உரிமை மறுக்கப்படக் கூடாது எனக் கூறி மு.க.ஸ்டாலின் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தேர்தல் வெற்றியை ரிட் மனு மூலம் சவால் செய்ய முடியாது என்றும், தேர்தல் மனு மூலமாக மட்டுமே எதிர்க்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ரிட் மனுக்கள் மூலம் தேர்தல் முடிவுகளை சவால் செய்ய அனுமதித்தால், இதுபோன்ற ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் குவியும் சூழல் ஏற்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மறுபுறம், தவெக MLA வி.எஸ். பாபு தரப்பிலும் ஸ்டாலின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.