அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி ஊழல் புகார் குறித்த விவகாரத்தில் தமிழக மின்துறை பெயரும் அடிபடுகிறது என உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், ஜி.கே.மணி மட்டுமல்ல, அவரது கட்சி தலைவரும் பொது வெளியில் தொடர்ந்து இதுபற்றி பேசி வரும் நிலையில், அதை பற்றி இங்கு பேசுவார் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் உண்மை தெரிந்ததால் விட்டுவிட்டார் என கருதுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குறித்து பொதுவெளியில் வரும் தவறான தகவல்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து அளித்து வருவதாக விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி.க்களே குரல் எழுப்பி வருவதாகவும், திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாஜகவோ, பாமகவோ அதானி மீதான விசாரணையை ஆதரிப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், அதானி நிறுவன முதலீடுகள் தொடர்பாக தமிழ்நாட்டில் அரசியல் ஆக்கப்படுவதாகவும், தன்னை வந்து அதானி சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.