

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சில சட்டமன்ற உறுப்பினர்களின் கலகலப்பான பேச்சுகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிய மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், "நிறைய பேரிடம் 4, 5 கார்கள் இருக்கிறது. என்னிடமும் கார் இருக்கிறது. ஆனால் நம் முதலமைச்சர் கொடுத்த காரில் செல்லும்போது நான் பெருமையாக பணிக்கு செல்வேன்.
அவர் கொடுத்த காரில் தொகுதியைச் சுற்றி வரும்போது அதற்கு இருக்கக்கூடிய கெத்து எம்எல்ஏ என்ற கெத்து... முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பேசினார்.
இதைத் தொடர்ந்து பேசிய மொடக்குறிச்சி எம்எல்ஏ சண்முகம், "கொடுக்குறதுதான் கொடுக்குறீங்க இன்னோவா (Innova) காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்லுகின்றனர்" எனப் பேசி அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
"கொடுத்ததெல்லாம் கொடுத்தார்... அவர் யாருக்காக கொடுத்தார்.. ஒருத்தருக்காக கொடுத்தார்..ஊருக்காக கொடுத்தார்” என்று தவெக எம்எல்ஏ சிந்து எம்ஜிஆர் பாட்டு பாடி நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் சிரித்துக்கொண்டார்.
இத்துடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், "புதிதாக சட்டமன்றத்துக்கு வந்திருக்கும் உறுப்பினர்களுக்கு கார் தந்துள்ள முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஃபன்னா சொல்றேன். கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி. வேலையும் இல்லாம இருந்தேன். இப்போது வேலையும் கொடுத்திருக்காரு காரும் கொடுத்திருக்காரு தலைவரு.
நான் ஒவ்வொருமுறையும் ஊரில் இருந்து ரயிலில்தான் வருகிறேன். உள்ளே ஆட்டோவில் வரும்போது காவல் பணியாளர்கள் யார் நீங்கள் எனக் கேட்பார்கள். எம்எல்ஏ என்று சொல்லி ஐடி கார்டை காண்பித்தாலும் நம்ப மாட்டார்கள்.
இப்போது மக்கள் பசியாற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மக்கள் பணியாற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லார் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துககொள்கிறேன்." எனப் பேசினார்.
சபரி ஐங்கரன் பேசும்போது முதலமைச்சர் விஜய் திரும்பி யார் பேசுவது எனப் பார்த்து சிரித்தார்.
எம்எல்ஏக்களுக்கு கார் மட்டுமல்லாமல் ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதம் 75,000 ரூபாய் மற்றும் உதவியாளருக்கு 25,000 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்