"22 ஆண்டுகள் கழித்து கிடைத்த தீர்ப்பு” -பல கோடிகளை அபேஸ் செய்த எண்ணெய் நிறுவன உரிமையாளருக்கு சிறை!
வங்கி கடன் மோசடி வழக்கில் எண்ணெய் நிறுவன உரிமையாளருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், வங்கி அதிகாரிகள் இருவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவான்மியூர் மற்றும் தியாகராயநகரில் எண்ணெய் நிறுவனம் நடத்தி வந்த வாசுதேவன் என்பவர் கடந்த 2000-2001ம் ஆ ண்டில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து சென்னை வால்மிகிநகரில் செயல்பட்டு வரும் மகராஷ்டிரா வங்கி கிளையில் பல கோடி ரூபாயை எண்ணெய் கொள்முதலுக்காக பண பட்டுவாடா பெற்றுள்ளார்.
இதற்கு, வங்கி உதவி பொது மேலாளராக பணியாற்றிய ரமேஷ், மேலாளராக பணியாற்றிய நிர்மலா ஆகியோர் அதிகார வரம்பை மீறி பண பட்டுவாடாவை அனுமதித்துள்ளனர்.
இந்த பணத்தை முறையாக திரும்ப செலுத்தாததால் வங்கிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, வாசுதேவன், அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த வெற்றிவேல் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி வடிவேலு, குற்றம் சாட்டப்பட்ட வாசுதேவன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாசுதேவனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 1 கோடி ரூபாய் அபராதமும், வெற்றிவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதமும், வங்கி அதிகாரி ரமேஷ், நிர்மலா ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வாசுதேவன், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 22 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.