பருவமழைக்கு ஒத்திகை பார்த்து தயாராகி வரும் தீயணைப்புத்துறை...

பருவமழைக்கு ஒத்திகை பார்த்து தயாராகி வரும் தீயணைப்புத்துறை...
Published on
Updated on
2 min read

போஜராஜன் நகர் சுரங்கப்பாதை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தவறான தகவல்களை கூறி வருவதாக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையொட்டி, சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வடக்கு மண்டல தீயணைப்புத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

இந்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் கடலில் சிக்கி இருப்பவர்களை மீட்பது, மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை குடம், தண்ணீர் கேன் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மூலம் மீட்பது, ஸ்குபா வீரர்கள், ரப்பர் படகுகள் மூலம் கடலில் சிக்கித் தவிப்பர்களை மீட்பது உள்ளிட்டவை குறித்து சுமார் 120 தீயணைப்பு வீரர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராயபுரம் தொகுதி சட்டமன்ற மூர்த்தி, வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் தமிழக அரசு முன்னேற்பாடாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. வண்ணாரப்பேட்டையில் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை அப்பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை.

ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே ரூ.6.60 கோடி செலவில்  ரயில்வே மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் ரூ.13.40 கோடி செலவில் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த 3 மாதங்களாக சட்டசபையில் கோரிக்கை எழுப்பி, முதலமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தி தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.13.36 கோடி செலவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி போஜராஜன் நகர் சுரங்கப்பாதை அடிக்கல் நாட்டப்பட்டது.

போஜராஜன் நகர் சுரங்கப்பாதை ஏற்கனவே திறந்து விடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அதிமுக ஆட்சியில் நடக்காத ஒரு பணியை நடந்ததாக கூறுகிறார். தவறான தகவலை அவர் தொடர்ந்து அளித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்து நாடாளுமன்ற தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவையே இரண்டாகப் பிரித்துவிட்டார்.

அதனை மறைக்கவே இத்தகைய பொய் தகவலை பரப்பி வருகிறார். காசிமேடு துறைமுகம் விரைவில் மேம்படுத்தப்படும் அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. திமுக எந்த திட்டத்தையும் அரைவேக்காட்டுத்தமாக போடாமல் முழு ஏற்பாட்டில்தான் பணிமேற்கொள்ளப்படும் அதனால் சிறிது தாமதம் ஏற்படத்தான் செய்யும்.

ராயபுரம் தொகுதியில் கடந்த வருடமே மழைநீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதால் கடந்த மழைக்காலங்களில் கூட மழைநீர் தேங்குவது இல்லை. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தீயணைப்புத்து மாவட்ட அலுவலர் லோகநாதன், தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விரைவில் நடத்தப்படும்.

சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாய அண்டை மாநிலங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வந்து நிற்க வைக்கப்பட்டுள்ளன. வருகிற 19 ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com