முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பதற்காக திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை சென்று வர காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த (2022) ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முருகன் சார்பில் அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சொந்த நாட்டிற்கு செல்லும் வரை வெளியே செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும், உயர் பாதுகாப்பு சிறைகளை விட முகாமில் நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகள் கடுமையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தற்போதைய நிலையில் முருகனுடைய சொந்த நாடான இலங்கையில் அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், அங்கு செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே சர்வதேச பாஸ்போர்ட்டை பெற சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு செல்வதற்காக சிறப்பு முகாமில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவும், அங்கு சென்று வர தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசிற்கும், வெளிநாட்டினர் பதிவு மண்டல அலுவலருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க வேண்டுமா? அல்லது தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா? என தலைமை நீதிபதியின் உத்தரவை பெறும்படி, நீதிமன்ற பதிவுதுறைக்கு உத்தரவிட்டனர்.