
கடலூரில், பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மரணத்துக்கான காரணத்தை கண்டறிய, குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சட்டவிரோத காவலில் உள்ள தனது ஒரு வயது மகனை மீட்டுத்தரக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, காவல்துறை தரப்பில், மனுதாரர் பெண்ணுக்கு கடந்த ஜூன் 7 -ஆம் தேதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இரண்டாவது குழந்தை பிறந்ததாகவும், உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை 4 ஆம் தேதி மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து வந்த போது, அது ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல், அன்று மாலையே குழந்தையின் உடலை கெடிலம் ஆற்றங்கரையில் அடக்கம் செய்து விட்டதாகவும், பாலுக்காக ஏங்கி குழந்தை இறந்திருக்கலாம் எனவும் அதை பிரேத பரிசோதனை மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என மனுதாரர் பெண் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், அப்பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது குறித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து, கடிதம் பெற்று காவல் துறை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, குழந்தையின் மரணம் தொடர்பாக, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிரேத பரிசோதனைக்குப் பின் குழந்தையின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்யவும், இதற்கு குழந்தையின் பெற்றோரை அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை அறிக்கையை ஆகஸ்ட் 28 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.