"வி.எஸ்.பாபு மரணத்தில் சந்தேகம்?" - 'கொலை' வழக்காகப் பதிவு செய்ய சொல்லும் சமூக ஆர்வலர்! அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்

எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனை மீது சந்தேகம் எழுந்துள்ளதால், வி.எஸ். பாபுவின் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Kolathur MLA VS Babu
Kolathur MLA VS Babu
Published on: 
Updated on: 
2 min read

கொளத்தூர் MLA வி.எஸ். பாபு மரணமடைந்த நிலையில், எம்.ஜி.எம். மருத்துவமனை மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு நேற்று (நவ 19) மரணமடைந்ததாக எம். ஜி. எம் மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வி.எஸ். பாபு, 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்ததாக மருத்துவமனை நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.

மருத்துவமனையின் அறிக்கை:

கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு மரணம் தொடர்பாக எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் நீண்டகால சுவாசப் பிரச்சினை காரணமாக 2026 செப்டம்பர் 9-ஆம் தேதி MGM ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரும் சிறந்த சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, 2026 நவம்பர் 19-ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு உயிரிழந்தார். இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு MGM ஹெல்த்கேர் மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொலையா..? மரணத்தில் மர்மம்:

தற்போது கொளத்தூர் MLA வி.எஸ். பாபுவின் மரணத்தை சமூக ஆர்வலர் ஒருவர் கொலை என புகாரளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கோ. தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் மற்றும் DGP அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அந்த புகாரில், கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு, திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் MLA வி.எஸ். பாபு சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மறுநாள் வெளியான தகவல்களின்படி அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை குறித்த தெளிவான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், அவருக்கு 'டிரக்கியாஸ்டமி' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சில இணையச் செய்திகள் மூலம் தகவல்கள் வெளியாகியதாக அவர் குறிப்பிட்டார். (டிரக்கியாஸ்டமி (Tracheostomy) என்பது கழுத்தின் முன்புறத்தில் ஒரு சிறிய திறப்பு உருவாக்கி, நேரடியாக மூச்சுக்குழாயில் ஒரு குழாயை (tracheostomy tube) பொருத்தும் அறுவை சிகிச்சை முறையாகும்.)

ஏற்கனவே, தொகுதி மக்களின் பிரதிநிதியாகச் செயல்பட வேண்டிய சட்டமன்ற உறுப்பினரின் உடல்நிலை மற்றும் பொது நிர்வாகப் பணிகள் குறித்து அறியும் நோக்கில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(a)-இன் கீழ் தேவராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததை (வழக்கு எண்: SR WP NO.77523/2026) குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், நேற்று மதியம் MLA வி.எஸ். பாபு உயிரிழந்ததாக வெளியான செய்தி மேலும் அதிர்ச்சியளிப்பதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சமூக ஆர்வலர் கோ. தேவராஜன் நேற்று (19.11.2026) தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (DGP), சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் கே-3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் இந்த விவகாரம் குறித்து அளித்துள்ளதுள்ளார். மேலும் வி.எஸ். பாபுவின் ரத்த மாதிரிகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான சிகிச்சை முறைகளின் வீடியோ பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவரது உடலை அரசு மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு (Post-mortem) செய்ய வேண்டும் என்றும் எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனை மீது சந்தேகம் எழுந்துள்ளதால், வி.எஸ். பாபுவின் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கொளத்தூர் MLA வி.எஸ். பாபுவின் உடல்நிலைக்கு என்ன ஆனது? என்பது போன்ற வழக்கினை தாக்கல் செய்திருந்த நிலையில், விசாரணைக்கு வரவிருந்த அந்நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறியது சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.