தமிழ்நாடு முழுவதும் 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம் தொடக்கம்...!

Published on
Updated on
1 min read

தமிழ்நாடு முழுவதும் 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற பெயரில் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். 

அதன்படி, செங்கல்பட்டில் சுகாதார நடைபாதை திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். மகேந்திரா சிட்டி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தென்காசியில், நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்கீழ் 8 கிலோ மீட்டர் நடைபயிற்சி மேற்கொள்ளும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நன்னகரம் மின்நகர் நுழைவு பகுதியில் புறப்பட்ட இந்த நடைபயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் குமார் உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த நடைபயணம், அரசு மருத்துவமனை, இந்து நகர் குடியிருப்பு வரைசென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com