நாகர்கோவில் பகுதியில் செயல்பட்டு வருவது தான் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி. இந்த கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியர்கள் சிலர் நேற்று பிப்ரவரி 19ம் தேதி, மூணாறு அருகே உள்ள பிரபல சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் செயல்பட்டு வருகின்றது ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி. இந்த கல்லூரியை சேர்ந்த சில மாணவ, மாணவியர்களும் 3 ஆசிரியர்களும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளமான மூணாறு மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் அங்கிறுக்கும் குண்டலா என்கின்ற அணையை பார்வையிட சென்ற பொழுது, அவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி உள்ளது. மூணாறு மலைப்பகுதிக்கு அருகே உள்ள எக்கோ பாயிண்ட் என்கின்ற சாலையின் வளைவில் பேருந்து சென்ற பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அது கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர், மேல் சிகிச்சைக்காக இப்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூணாறு அருகே உள்ள அந்த எக்கோ பாயிண்ட் என்கின்ற இடத்தில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது தான் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே கவிழ்ந்து இந்த கோர விபத்து நடந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
40 பேருடன் சென்ற அந்த பேருந்தில் இருந்த 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சுமார் 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது மூணாறில் உள்ள டாடா மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.