

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில் நிலையில் இன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இன்று மாலை திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? என்று அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர மாநிலம் முழுவதும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இதனிடையே திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றிட தமிழகம் முழுவதும் இருந்து இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு செல்ல முடிவு செய்திருந்தனர். இதேபோல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இந்து முன்னணி மற்றும் பாஜக-வினர் திருப்பரங்குன்றம் செல்ல ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்திருந்தனர்.
அதன்படி, நெல்லையில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் பலரை தொடர்பு கொண்ட போலீசார், அவர்கள் தற்போது உள்ள இடம், பயணத் திட்டம் குறித்து நேற்று மாலையில் இருந்து கேள்விகள் எழுப்பி விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர்.
அந்த வகையில் நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் என மொத்தம் 750 பேர் முன்கூட்டியே நேற்றே அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதபடியாக நேற்று நள்ளிரவு 11 மணி முதல் அவர்களது வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிர்வாகிகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் 160 பேரும், தென்காசியில் 130 பேரும், குமரியில் 300 பேரும், தூத்துக்குடியில் 190 பேரும் அடையாளம் காணப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் வள்ளியூர் பகுதியில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் பண்ணை பாலகிருஷ்ணன், செட்டிகுளம் அம்மா செல்வகுமார், நெல்லை மாநகரில் வடக்கு மாவட்ட தலைவர் முத்துபலவேசம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 480 பேர் அடையாளம் காணப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறும் பட்சத்தில் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இதுவரையிலும் சரகத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலியில் உள்ள தனது இல்லம் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது, காவல்துறை கெடுபிடிகள் தேவையற்றவை என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறை குவிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "இவ்வளவு பதற்றமும், காவல்துறை கெடுபிடிகளும் தேவையே இல்லை.” “உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில் சென்று தீபம் ஏற்றுவோம் என்று தமிழக அரசு அறிவித்தாலே போதுமானது” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படவில்லை என்றால், தமிழக முதலமைச்சர் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பவராகவும், நிர்வாகத் திறமையற்றவராகவுமே பார்க்கப்படுவார்," என கடுமையாக விமர்சித்தார்.
மேலும் “திருப்பரங்குன்றம் செல்ல இருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, "நான் மதியம் திருப்பரங்குன்றம் புறப்படுகிறேன். அங்கு தீபம் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்