
டில்லி : கடந்த சில நாட்களாகவே தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விவகாரம், மும்மொழிக் கொள்கை எனப்படும் தேசிய கல்வி கொள்கை தான். இதில் யார் சொல்வது சரி என தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த விரும்புவதற்கு மத்திய அரசு சொல்லும் காரணம், அதை எதிர்ப்பதற்கு தமிழக அரசு சொல்லும் காரணம் என இரண்டுமே நியாயமானதாக தான் படுகிறது. இதனால் யாருக்கு ஆதரவு அளிப்பது என தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
திமுக-பாஜக சொல்லும் நியாயங்கள் :
தேசிய கல்வி கொள்கையை, அதாவது அனைவரும் இந்தி மொழி படிக்க வேண்டும் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் இளைஞர்களுக்கும் அனைத்து இடங்களிலும் பணியாற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என மத்தியில் ஆளும் பாஜக., அரசு சொல்கிறது. ஆனால், இது தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் முயற்சி என்றும், இந்தி மொழி என்ற பெயரில் மறைமுகமாக சமஸ்கிருத மொழியை மத்திய அரசு புகுத்தப் பார்க்கிறது என்றும் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு சொல்கிறது. இன்று, நேற்றல்ல பல ஆண்டுகளாக இந்தியை தமிழகம் எதிர்ப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
திமுக.,வின் வாதம் :
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல தென் மாநிலங்களில் இரு மொழி கொள்கை கல்வி தான் தற்போது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது மாணவர்கள், ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லது தங்களின் தாய்மொழியில் தான் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய தேசிய கல்வி கொள்கையால் பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில் பாரம்பரியமாக பேசப்பட்டு வரும் மைதிலி, பிரஜ்பாஷா, புந்தேலி, அவதி போன்ற 25 க்கும் அதிகமான மொழிகள் அழிக்கப்பட்டு, இந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தினால் தான் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2000 கோடி கல்வி நிதியை ஒதுக்குவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால் தமிழகத்திற்கு ரூ.10,000 கோடி நிதி கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையை ஒரு போதும் தமிழகத்தில் அமல்படுத்தி, தமிழகத்தை 2000 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளும் பாவத்தை செய்ய மாட்டேன் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காங்கிரசை மாட்டி விட்ட பாஜக :
இதை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்திலும் வீடியோவாக அவர் வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக.,வை சேர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "சமூகத்தை பிளவுபடுத்தும் இது போன்ற முயற்சிகளால் உங்களின் மோசமான அரசு நிர்வாகத்தை ஒரு போதும் மறைக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இது பற்றி என்ன சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. இந்தி பேசும் எம்.பி.,யான அவர் இதை ஏற்றுக் கொள்கிறாரா?" என கேள்வி எழுப்பி உள்ளார். பாஜக., தலைவர் மட்டுமல்ல, தமிழக கவர்னரான கே.என்.ரவியும் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் அது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என கூறி வருகிறார்.
தேசிய கல்வி கொள்கைக்கு காரணம் :
தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் இன்று பாஜக-திமுக இடையே கடுமையான போட்டா போட்டி நடந்து வருகிறது. ஆனால் இந்த சண்டைக்கு பிள்ளையார் சுழி யார் போட்டது? இந்த பிரச்சனையை துவக்கி வைத்தது யார் என தெரிய வேண்டும் அல்லவா? நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி ஒழுங்குமுறையை ஏற்படுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது தான் தேசிய கல்வி கொள்கை. முதன் முதலில் தேசிய கல்வி கொள்கையை 1968ம் ஆண்டு, அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. அதற்கு பிறகு 1986ல் பிரதமர் ராஜீவ் காந்தி அரசு அதை மாற்றி அமைத்தது. அதற்கு பிறகு 2020ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மாற்றம் கொண்டு வந்துள்ளது.
காங்கிரசிற்கு வந்துள்ள சிக்கல் :
இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே, யார் சொல்வது சரி என்ற போட்டி ஒரு புறம் நடந்த கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியை எதிர்க்கும் திமுக, இந்தி மொழியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை முதன் முதலில் அறிமுகம் செய்த காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் காங்கிரசின் ஆதரவு, இந்தியை வலியுறுத்தும் பாஜக.,விற்கா அல்லது கூட்டணி கட்சியான திமுக.,விற்கா என்பது தான். கூட்டணி கட்சியை ஆதரித்தால் அது இந்தி எதிர்ப்பிற்கு ஆதரவு அளிப்பது போல் ஆகி விடும். அப்படி காங்கிரஸ் செய்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு வட மாநிலங்களில் இருக்கும் செல்வாக்கு சரிய காரணமாகி விடும். ஒருவேளை பாஜக., அரசு கொண்டு வரும் தேசிய கல்வி கொள்கையை ஆதரித்தால், திமுக மட்டுமின்றி பல மாநில கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் இழக்க வேண்டி இருக்கும். தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் போட்டி நடப்பது என்னவோ மத்திய-மாநில அரசுகளுக்கு இடையில் தான். ஆனால் நெருக்கடியும், அரசியல் ரீதியான சிக்கலிலும் சிக்கி இருப்பது என்னவோ காங்கிரஸ் கட்சி தான். இதில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன, இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.