நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இந்தியர்கள் பலர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள், தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து, தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இதில் 495-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாயமானவர்களை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதுடன், மோப்ப நாய்களின் உதவியுடனும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பேரிடரில் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு குழுவினரும் நேபாளத்திற்கு யாத்திரை மற்றும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியைச் சேர்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் மூலம் 49 பேர் கைலாஷ் யாத்திரைக்குச் சென்றதாகவும், அவர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
இதேபோல், கோவை ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த சுமார் 80 பேர் நேபாளம் சென்றுள்ளதாகவும், அவர்களின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை அறிய முடியாத சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆன்மிகப் பேச்சாளர் தேச. மங்கையர்க்கரசி தலைமையில் கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற 150 பேர் பாதுகாப்பாக திபெத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தேச. மங்கையர்க்கரசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், யாத்திரைக் குழுவினர் திபெத்திலேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்பு துண்டிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக அவர்களது உறவினர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர். தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவும் நேபாளம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, உதவி மையத்திற்கு வரும் அழைப்புகள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள், அவர்களின் இருப்பிடத்தை கண்டறியும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். மேலும், தூதரக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், முதலில் தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மட்டுமே நேபாளம் சென்றிருப்பார்கள் என கருதப்பட்ட நிலையில், தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
அவர்களில் 26 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், ஆனால் அவர்களை தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், சிலரை இதுவரை கண்டறிய முடியாத நிலையில், மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் தொடர்ந்து பேசி அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை விரைவில் மீட்டு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். நேபாள பெருவெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவி வரும் நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான தகவல்களை வழங்கவும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும் தமிழக அரசு அமைத்துள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.