நீலகிரி: தேயிலை விவசாயிகள் 6-வது நாளாக உண்ணாவிரதம்...!

நீலகிரி:  தேயிலை விவசாயிகள் 6-வது நாளாக உண்ணாவிரதம்...!
Published on
Updated on
2 min read

நீலகிரி மாவட்டம் உதகையில் விவசாயிகளின் தொடர்  உண்ணாவிரத போராட்டம் காரணமாக தேயிலை தூள் உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தின் நாக்குபெட்டா படுகர் நலச் சங்கம் சார்பில் நான்கு சீமைகளில் ஆறாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டத்தால் தேயிலைத் தூள்  உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரபடுத்தப்படும் என தேயிலை விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பொருளாதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த தேயிலை விவசாயத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பசுந்தேயிலைக்கு 20 ரூபாய் முதல் செலவாகும் நிலையில் தற்போது 14 ரூபாய் மட்டுமே கொள்முதல் விலை வழங்கப்படுவதால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு 35 ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் வைத்து வந்தனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி நாக்குப்பெட்ட படுகர் நல சங்கம் சார்பில் நீலகிரி மாவட்டத்தின் நான்கு சீமைகளில் உள்ள 400க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தேயிலை விவசாயிகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து ஆறாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் மேற்கு சீமை சிறு,குறு விவசாய நல சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் நீலகிரி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் மனேஸ் சந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் தேயிலை விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டும், தேயிலைக்கு நிரந்தர விலை வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேயிலை விவசாயிகள், நீலகிரி மாவட்டத்தில் 160 தனியார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில்  நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்நிலையில் மாவட்ட முழுவதும் நடைப்பெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு நாற்பது லட்சம் வீதம் ஐந்து நாட்களுக்கு மேலாக நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட்டம் காரணமாக மாவட்ட பொருளாதார ரீதியில் இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடரும் பட்சத்தில் பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும், அதேபோல் தற்போது சட்ட ஒழுங்கு படி போராட்டங்கள் நடைபெற்ற வரும் நிலையில் நாளடைவில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு விரைவில் தேயிலைக்கு நிரந்தர விலை வழங்க வேண்டும் விவசாயிகள்  தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com