தன்னுடைய தவறுகளை மறைக்கவே இந்த வழக்கு...செந்தில் பாலாஜி மீது பகீர் புகார்!

தன்னுடைய தவறுகளை மறைக்கவே இந்த வழக்கு...செந்தில் பாலாஜி மீது பகீர் புகார்!
Published on
Updated on
1 min read

தனது தவறுகளை மறைக்கவே தன்னை பற்றி பேசக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றச்சாட்டு வைத்த நிர்மல்குமார்:

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

வழக்கு தொடர்ந்த செந்தில் பாலாஜி: 

இதையடுத்து, என்னை பற்றி அவதூறு கருத்துகளை பேச நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

பதில் மனு தாக்கல்:

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நிர்மல் குமார் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரம் உள்ளதாகவும், தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே தன்னை பற்றி பேசக்கூடாது என இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

கோரிக்கை:

மேலும், தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் அளித்திருந்த ஒரு பேட்டியில், மது விற்பனையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்றும், அதனை அடிப்படையாக கொண்டே புகார் அளித்திருந்தாகவும், எனவே தனது குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று செந்தில்பாலாஜி கூறுவது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, செந்தில் பாலாஜி குறித்து பேச விதிக்கப்பட்ட தடையானது,  எனது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்பதால் அந்த தடையை நீக்க வேண்டுமெனவும், செந்தில்பாலாஜி வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் நிர்மல் குமார் தனது பதில் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com