“நிர்மல் குமார் தான் அதிமுகவின் Spy” - முன்னாள் அமைச்சர் RB உதயகுமார் விமர்சனம்! விஜயை வீழ்த்த அனுப்பப்பட்டவரா?

நிலம் தனியாருக்கு முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைச்சர் ரமேஷ் பொறுப்பு ஏற்க வேண்டும்
அமைச்சர் நிர்மல்குமார்
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய், மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார் உதயகுமார் பேசியதாவது, “தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சியைப் புகழ்ந்து தினமும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்கள் வெளியிடப்படுவதாகக் கூறினார். டெல்லியில் ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலைமையே தமிழகத்தில் விஜய்க்கும் ஏற்படும் என்று விமர்சித்தார். சமூக வலைதளங்களில் திட்டமிட்ட பிரசாரத்தின் மூலம் மக்களிடம் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருவதாகவும், இடைத்தேர்தல் தொடர்பான சட்டரீதியான அம்சங்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். தவெக அரசு ஆட்சிக்கு வந்த 75 நாட்களிலேயே பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாகவும், சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நிலம் தனியாருக்கு முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைச்சர் ரமேஷ் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதிமுக இனி டிஜிட்டல் தளங்களிலும் தீவிரமாக செயல்படும் என தெரிவித்த அவர், "தவெக அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல அதிமுகவும் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடும்" என்றார். வைகோ குறித்து பேசிய ஆர்.பி. உதயகுமார், "ஒரு பதவி கிடைத்தால் யாரையும் ஆதரித்து பேசக்கூடிய நிலைக்கு அவர் சென்றுவிட்டார். திமுகவில் பதவி கிடைக்காததால் தற்போது விஜயை ஆதரித்து வருகிறார்" என விமர்சித்தார். மேலும் “வைகோ சொல்றாரு, நான் வாழ்க்கையில ரெண்டு தப்பு பண்ணிட்டேன் அப்படின்னு. என்ன தப்புன்னா, அதிமுகவோட திமுகவோடு நான் கூட்டணி வச்சது ரெண்டு தப்பு அப்படின்னு. விஜய் அவர்களே, எச்சரிக்கையாக இருங்க. நீங்க வாழ்க்கையிலே செஞ்ச தப்பு இந்த வைகோ அவர்களை நீங்கள் கூட்டணியில் சேர்த்ததுதான். உங்களை முடிக்காம விடவே மாட்டார். முடிச்சுட்டு பாவம் இந்த விஜய் அண்ணன் நல்லா இருந்தாருங்க அப்படினு சொல்லுவாரு” என்று கிண்டல் செய்யும் விதமாக விமர்ச்சித்தார்.

மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசிய அவர், "நிர்மல்குமார் சொல்வதை எதையும் நம்பாதீர்கள். அவர் அதிமுகவின் 'Spy'. விஜயை அரசியலில் முடித்துவிட்டு மீண்டும் அதிமுகவுக்கு வந்துவிடுவார். திமுகவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமிதான் தலைவர் என்று பேசியவரே இன்று வேறு இடத்தில் இருக்கிறார்" என்று நகைச்சுவை கலந்த விமர்சனத்தை முன்வைத்தார். ஆர்.பி. உதயகுமார் கூறிய இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது குற்றச்சாட்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com