எத்தனை வழக்கு வந்தாலும் சந்திக்க தயார்.. திருச்சியில் காவல்துறை கட்டுப்பாடுகளை சல்லி சல்லியாக உடைத்த விஜய்!

விஜயின் பயணத்திற்கு திருச்சி காவல்துறை பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. அதில் ...
vijay's first campaign
vijay's first campaign
Published on
Updated on
2 min read

திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கிய நிகழ்வு, காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி கிட்டத்தட்ட ஒரு 'ரோடு ஷோ'வாக மாறியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்ன?

விஜயின் பயணத்திற்கு திருச்சி காவல்துறை பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. அதில் மிக முக்கியமானவை:

'ரோடு ஷோ'வுக்கு அனுமதி இல்லை: விஜய், தனது வாகனத்தில் அமர்ந்தபடியே செல்ல வேண்டும். வாகனத்தில் நின்று கொண்டு, பொதுமக்களைப் பார்த்து அசைத்துச் செல்லவோ, அல்லது வாகனத்தை விட்டு வெளியே வரவோ அனுமதி இல்லை.

வாகனங்களுக்குக் கட்டுப்பாடு: விஜயின் வாகனத்துக்குப் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கப்படாது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஊர்வலமாகப் பின்தொடரக் கூடாது.

நேரக் கட்டுப்பாடு: காலை 10.30 முதல் 11.00 மணி வரை, வெறும் அரை மணி நேரம் மட்டுமே மரக்கடை பகுதியில் பேச அனுமதி.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கட்சி தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர் செய்யவும், தீயணைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு கூடாது: பள்ளி செல்லும் மாணவர்கள், மருத்துவமனை செல்லும் வாகனங்கள், பொதுமக்கள், மற்றும் வணிகர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது.

இந்த நிபந்தனைகள் அனைத்தும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டவை. ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

விஜயின் பிரச்சார பஸ், மரக்கடை பகுதியை இன்னும் நெருங்கவில்லை. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பைக்குகளில், கார்களிலும் அவரது பேருந்தை முன்னும் பின்னும் ஆக்கிரமித்துள்ளன. இது, காவல்துறை விதித்த 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி இல்லை என்ற நிபந்தனையை அப்பட்டமாக மீறிய செயலாக அமைந்துள்ளது.

காவல்துறையினர், இந்த விதிமீறல்களைக் கண்டபோதும், பெரும் மக்கள் கூட்டம் காரணமாக அவர்களால் அதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. விஜயின் வாகனத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தாலும், கட்டுப்பாடற்ற ரசிகர்கள், அந்த வளையத்திற்குள்ளும், வெளியேயும் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

எனினும், இந்த நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், அவர் இந்த விதிமீறல்களை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்கின்றனர். மாறாக, இந்த விதிமீறல்கள் மூலம் அவர் தனது பலத்தையும், மக்கள் ஆதரவையும் தமிழக அரசுக்கும், பிற அரசியல் கட்சிகளுக்கும் காட்ட விரும்புகிறார். "எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்கத் தயார்" என்ற மனநிலையுடன், அவர் தனது பயணத்தை தொடங்குவது தெளிவாகத் தெரிகிறது என்கின்றனர்.

குறிப்பாக, காவல்துறை அனுமதி மறுத்த சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பதிலாக, மரக்கடை பகுதியை தேர்வு செய்தது, விஜயின் ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வு என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். அங்கு மக்கள் கூடும் வாய்ப்பு அதிகம். இது, தனது மக்கள் செல்வாக்கை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என்று விஜய் நம்புகிறார். மேலும், காவல்துறை நிபந்தனைகள் விதித்தாலும், கட்டுப்பாடற்ற ரசிகர் கூட்டம் அதை மீறும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கலாம். இந்த கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தை, அவர் ஒரு அரசியல் சக்தியாக மாற்றி, அதன் மூலம் தனது அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறார் என்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com