தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் கையில் இருக்கக் கூடிய உள்துறை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.
காரசாரமான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதற்கு பதிலாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் எதிர் கேள்விகள் கேட்க, அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
ஆளுங்கட்சியினர் தினம் தினம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அரசு அமைந்த பிறகு 8 காவல் மரணங்கள் நடந்திருக்கிறது. குறைந்தபட்சமாக முதல்வர் ஸாரி கூட கேட்கவில்லை.
காவல்துறையும் உளவுத்துறையும் செயலிழந்துவிட்டதோ எனும் சந்தேகம் எழுகிறது.
ஜென் ஸி இளைஞர்களையும் அவர்களுக்கு சாதகமான கட்சியினரையும் பத்திரிகையாளர்களையும் இந்த அரசு கைது செய்கிறது.
உயர்கல்விதுறை சார்பாக இடதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கு மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என சுற்றறிக்கை கொடுக்கப்படுகிறது. இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா?
இந்த அரசு புதிதாக கொண்டு வந்த திட்டங்களை விட பெயர் மாற்ற அறிவிப்புகள்தான் அதிகம் வருகிறது... இதையெல்லாம் சேர்த்து தாய்மாமன் காது குத்தும் திட்டம் என அறிவித்திருக்கலாம்.
முதலமைச்சரை ஓப்பனாக விமர்சனம் செய்கிற பாஜக தலைவர்கள் மீது இதுவரைக்கும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு திங்கள்கிழமை பதிலளிப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். அப்போது அவர் பேசிய பன்ச் வசனம் கவனம் பெற்றது.
விஜய் பேசுகையில், "உறுப்பினர்கள் கேட்கிற அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தை நான் திங்கள் கிழமை வந்து பேசுகிறேன். நான் இங்கு இல்லை என்றால் கூட யார் யார் என்ன கேட்கிறார்கள் என்பது எனக்கு வந்துவிடும். எல்லா கேள்விகளுக்கும் தெளிவாக பதில் சொல்கிறேன். உங்கள் சார்பாக ஒரே ஒரு பிராமிஸ் (promise) மட்டும் கேட்கிறேன். யாரும் எந்திரிச்சு ஓடிடக் கூடாது." எனக் கூறிவிட்டு சட்டென சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார்.
திமுக உறுப்பினர்கள் முதலமைச்சரின் பேச்சை எதிர்த்து எழுந்து நிற்க, சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சர் இந்த பதிலை ஒரு மணி நேரத்திற்கு முன்பு சொல்லியிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. 'எல்லாரும் அமைதியா இருங்க, 3 நாள் பிரிப்பேர் பண்ணிட்டு வந்து பேசுகிறேன்.' என்பதைத்தான் நானும் சொன்னேன்.
யாரும் ஓடி போயிடாதீங்க என்றார். இப்போது யார் ஓடிப் போனா என்பதை நீங்களே பார்த்தீர்கள்." எனப் பேச பேரவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்