

தமிழ்நாட்டில் காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக ஒருவர் கூட பணியில் இல்லை என டிஜிபி கூறுவதை ஏற்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆர்டர்லிகளாக தற்போது யாரும் இல்லை என தமிழ்நாடு டிஜிபி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக்கூடாது என டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதை பாரட்டுவதாகவும் அதேவேளையில் ஆர்டர்லிகளாக சீரூடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தி தாள்களிலும், பொதுத்தளத்திலும் தகவல்கள் வரும் நிலையில் ஆர்டர்லிகளாக யாரும் இல்லை என டிஜிபி கூறுவதை ஏற்க முடியவில்லை என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகளாக பணியில் இருப்பது தொடர்பாக புகார் எதுவும் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயளாலர் மற்றும் உள்துறை செயலாளரை தாமாக முன்வந்து இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஜனவரி ஏழாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.