சேலத்தில் தவறான கொரோனா பரிசோதனை முடிவுகளை கொடுத்து வந்த இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை போல தவறு செய்யும் தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்கிற நிலையே இல்லை. மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு பணியில் 15,000 பேர் பணியாற்றி வருகின்றனர். விரைவில் கொரோனா பரவல் பூஜ்ஜிய நிலைக்கு வரும் எனக் கூறினார்.
மேலும், ஒரு வாரத்தில் இரும்பாலையில் கூடுதல் 500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுவிடும் என்று கூறிய அவர் முந்தைய ஆட்சியாளர்கள் உரிய மின்பராமரிப்பு பணிகளை செய்யவில்லை என குற்றம் சாட்டினார். அதோடு, ஊரடங்கு முடியும் வரை மின் பராமரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர, அவசிய தேவைக்கு மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்ற அவர் தமிழகத்தில் 100 சதவீதம் மின்தடை இருக்காது என்றும் அதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.