வட மாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை...வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை...தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

வட மாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல்  இல்லை...வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை...தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், அவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் இரு வேறு இடங்களில் பீகார் மாநில இளைஞர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொளிகள் பரவி வந்தன. இது குறித்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபுவுடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த டிஜிபி, அந்த காணொளிகள் உண்மையில்லை என்றும் தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் மட்டுமின்றி பிற வட மாநில தொழிலாளர்களுக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து பீகார் மாநில சட்டப்பேரவையிலும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியதால், இதற்கு பதிலளித்த  துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு காவல்துறை டிஜிபியின் அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்று விளக்கமளித்தார். இதனிடையே,  செய்தியாளர்களைச் சந்தித்த பீகார் மாநில ஏடிஜிபி ஜே எஸ் சங்வார், வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள், எவ்வித அச்சமுமின்றி அமைதியாக பணியாற்றி வருவதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க பீகார் அனைத்துக்கட்சி சட்டமன்றக் குழு தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கூட்டம் கூட்டமாக ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட செல்கிறார்களா அல்லது அச்சுறுத்தலால் செல்கிறார்களா என்று தெரியாத நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளதால் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com